கேத்தே திரையரங்கின் கணினிக் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டதால் நுழைவுச்சீட்டு விற்பனை பாதிக்கப்பட்டது. இணையம் வழியாகவும் நுழைவுச் சீட்டுக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை.
ஏப்ரல் 30ஆம் தேதி அங் மோ கியோ ஹப்பில் உள்ள கேத்தே திரையரங்குக்குச் சென்றவர்களுக்குக் கையால் எழுதப்பட்ட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றில் திரைப்படத்தின் பெயர், திரையரங்கு எண், நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தன.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்விக்கு, ஏப்ரல் 25ஆம் தேதியிலிருந்து கணினிக் கட்டமைப்பில் கோளாறு இருப்பதாகவும் தற்போது அது பழுது பார்க்கப்படுவதாகவும் ஏப்ரல் 30ஆம் தேதி கேத்தே திரையரங்கின் பேச்சாளர் ஒருவர் பதிலளித்தார்.
“தற்போது பிரச்சினைக்குத் தீர்வுகண்டு வருகிறோம். விரைவில் வழக்க நிலைக்குத் திரும்பும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டுகளை நேரடியாகத் திரையரங்கில் வாங்கலாம். திரையீட்டு நேரங்கள் இணையத்தில் இடம்பெற்றுள்ளன என்றார் அவர்.