தமிழவேள் கோ.சாரங்கபாணியின் அரும்பணிகளை எடுத்துரைத்த இளையர்கள்

தமிழ்முரசு நாளிதழின் நிறுவனர் தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு ‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் தலைவர் ரெகுநாத் சிவா தலைமை வகித்தார்.

சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் வேரூன்றவும் தீவு முழுவதும் தமிழ் ஒலிக்கவும் செய்தவர் கோ.சா என்றழைக்கப்படும் தமிழவேள் கோ.சாரங்கபாணி. தமிழ்ச் சமூ­கத்­தின் குர­லாக விளங்கி, கல்வி, வாழ்­வா­தா­ரம், உரிமை என மக்­க­ளுக்கு விழிப்­பூட்டி தமிழர் அடையாளத்தை முன்னிறுத்­தி­ய­வர் அவர்.

தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவுத் தலைவரான அழகிய பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

1952ல் தொடங்கப்பட்ட மாணவர் மணி மன்றத்தில் எழுதி வளர்ந்தவர்கள் இன்றைய மூத்த எழுத்தாளர்கள் பலர் என்ற அவர், தமிழவேளின் 50வது நினைவாண்டில், சிங்கப்பூரில் சிறுகதை எழுதப்பட்ட 100வது ஆண்டு கொண்டாடப்படுகிறது என்று கூறினார்.

தமிழவேளை அறிந்தவர்களான தமிழவேள் நற்பணி மன்றத் தலைவர் திரு தியாகராஜன், டாக்டர்.ச. வைரவன் இருவரும் அவர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

‘தமிழவேளின் சீர்திருத்தங்கள்’ எனும் தலைப்பை ஒட்டி நிகழ்ச்சியில் உரையாற்றினார் தேசிய தொடக்கக் கல்லூரி மாணவியான ஆசிரா முகம்மது பிலால், 15.

“தமிழ்மொழிக்கு சிங்கப்பூரில் தனிப்பெரும் தகுதியை பெற்றுத் தந்ததில் தமிழவேளுக்கு மாபெரும் பங்குண்டு. ‘தமிழர் திருநாள்’ என்ற பெரும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி, தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்து, தமிழர்களின் பெருமையை ஓங்கி ஒலிக்க செய்தவர் கோ.சா.

“சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழியான தமிழ், சிங்கப்பூரில் வாழும் மொழியாக நிலைத்திருக்க கோ.சா முக்கியக் காரணம் என்று ஆசிரா குறிப்பிட்டார். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் சிங்கையில் முழங்க காரணமாக இருந்தவர்,” கோ.சா என்றும் ஆசிரா தெரிவித்தார்.

சாலை, கட்டடத்துக்கு கோ.சாரங்கபாணி பெயர்

பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாளரான சுந்தர் பிலவேந்தர்ராஜ் தமிழர் திருநாள் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றி பேசினார்.

சிங்கப்பூரில் 50 ஆண்டுகள் வாழ்ந்த கோவிந்தசாமி சாரங்கபாணி தமிழர்களுக்காக செய்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. சமயம், சாதி, உள்ளிட்ட வேற்றுமைகளைக் களைய தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ‘தமிழர் திருநாள்’ தமிழ் என்ற ஒற்றை அடையாளத்தில் அனைவரையும் ஒன்றிணைத்தது என்று திரு சுந்தர் குறிப்பிட்டார்.

“சமுதாயத்திற்காகப் பாடுபட்ட தனிப்பெரும் தலைவரான கோ.சாரங்கபாணியின் பெயர் ஒரு சாலைக்கோ, கட்டடத்துக்கோ சூட்டப்பட வேண்டும். அப்போதுதான் என்றென்றும் அவர் நினைவு போற்றப்படும்,” என்று திரு சுந்தர் வேண்டுகோள் விடுத்தார்.

தலைமுறை தாண்டிய எதிர்காலம் குறித்து சிந்தித்தவர்

தமிழ்முரசு நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றும் திருவாட்டி மோனலிசா, தமிழவேள் சாரங்கபாணியின் இதழியல் பங்களிப்பைப் பற்றி உரையாற்றினார்.

ஒரு காசு விலையில் 1935ஆம் ஆண்டு சீர்திருத்தச் சங்கத்தின் வார இதழாகத் தொடங்கப்பட்ட தமிழ் முரசு, நஷ்டம் ஏற்பட்டு மூடப்படும் நிலைக்கு வந்தபோது, அதை கோ.சாரங்கபாணி நடத்தத் தொடங்கியது முதல், மேற்கொண்ட முயற்சிகளையும் சந்தித்த சவால்களையும் மோனலிசா விவரித்தார்.

சிங்கை தமிழ்ச் சமூகத்தின் மீதான அக்கறையையும், மேம்பாட்டு உத்திகளையும் வெளிப்படுத்த தமிழ் முரசை ஒரு கருவியாக கோ.சா பயன்படுத்தினார். அவர் பொருளீட்ட பத்திரிகை நடத்தவில்லை. சமுதாய முன்னேற்றமே அவரது நோக்கமாக இருந்தது என்றார் மோனலிசா.

“சிங்கப்பூருக்கு வந்த சில ஆண்டுகளிலேயே தமது தமிழ் மற்றும் தமிழ் சமூகத்துக்கான பற்றையும் அதை சார்ந்த சித்தாந்தங்களையும் மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் கருவியாக இதழியலைப் புரிந்துகொண்டவர் கோ.சா. தெளிவான சிந்தனையும், அதீத உறுதியும் கொண்ட ஒரு தலைவரால் மட்டும்தான் தலைமுறைகள் தாண்டிய எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு செயல்பட முடியும்,” என்றார் அவர்.

“சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகத்தை நிலைநிறுத்த என்ன தேவை என்பதில் அவருக்கு ஒரு தெளிவு இருந்தது. அந்தத் தெளிவை மக்களுக்குக் கொண்டுசேர்க்க அவர் பயன்படுத்திய சாதனம்தான் இதழியல்,” என்ற மோனலிசா, அவர் நடத்திய தேச தூதன், இந்தியன் டெய்லி மெயில் உள்ளிட்ட நாளிதழ்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

“தொழில்நுட்பக் காலத்தில் தமிழ்முரசு பல புதிய பரிமாணங்களை எடுத்துள்ளது. பல வளர்ச்சிகளைக் கண்டுவரும் தமிழ்முரசுக்கு இளையர்களின் ஆதரவு தொடர்ந்து தேவைப்படுகிறது. அப்பொழுதுதான் கோசா கண்ட கனவுகள் இன்னும் 100 ஆண்டுகளுக்குமேல் பயணிக்க முடியும்,” என்றும் மோனலிசா கூறினார்.

நிகழ்ச்சியில் சாரங்கபாணியின் இரண்டாவது மகள் ராஜம், 83, கலந்துகொண்டது முத்தாய்ப்பாக அமைந்தது.

“என் அப்பாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் தமிழ் சமுதாயத்திற்குப் பெரும்பங்காற்றினார். அவர் எனக்கும் என் உடன் பிறந்தவர்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி. அவரிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட கொள்கைகள் பல,” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் திருவாட்டி ராஜம்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 50 பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!