இந்­தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றிய திருவிழா

‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் இந்தியப் புத்தாண்டைக் கொண்டாட நடத்திவரும் வருடாந்திர இந்திய கலாசாரத் திருவிழா நிகழ்ச்சி, இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல் 13) மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை லிட்டில் இந்தியாவில் உள்ள ‘பொலி’ திறந்தவெளியில் நடந்தது.

இந்தியச் சமுதாயத்தில் உள்ள அனைத்து இனக் குழுக்களையும் ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, இந்திய கலாசாரத் திருவிழாவை 2010ல் தொடங்கி வைத்தார். அது இன்றுவரை ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்திய தாள வாத்திய இசைக் குழுவின் படைப்புடன் திருவிழா தொடங்கியது. அமைச்சர் சான், மற்ற முக்கிய விருந்தினர்களான மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டெனிஸ் புவா, கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் ஆகியோர் தாள வாத்தியம் முழங்க இந்திய மரபுடைமை நிலையத்திலிருந்து பொலி திறந்தவெளிக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்ட செல்வி காயத்ரி ஷர்மா வரவேற்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், இந்தியர்களிடையே பல வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவற்றைத் தாண்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் அம்சங்கள், நாம் நம் கலாசாரத்தின்மீது ஆழமாக வேரூன்றி இருக்கும் பெருமை, நம்பிக்கை, விருந்தோம்பல், அன்பு என்றார்.

இந்தியச் சமூகத்துடன் நெருக்கமாகப் பணிபுரிந்த அனுபவத்தை ஒரு கலைஞராகவும் கலை ஆர்வலராகவும் தாம் மிகவும் ரசித்து செய்ததாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் சான் தமது சிறப்புரையில், “சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் பன்முகத்தன்மையை அழிக்க நாம் ஒருபோதும் முயற்சிப்பதில்லை. மாறாக, நாம் பன்முகத்தன்மையை உருவாக்குகிறோம். நாம் ஒருவருக்கொருவர் மற்ற கலாசாரங்களைப் பாராட்டி ஏதாவது ஒன்றை புதிதாக உருவாக்குகிறோம். அதுவே சிங்கப்பூரின் அழகு,” என்றார்.

மேலும், சிங்கப்பூரர்கள் தங்கள் முன்னோடிகளின் வேர்களைக் கட்டிக்காக்கவேண்டும என்றும் கலாசார விழாக்கள் அவற்றைப் பிரதிபலிக்க உதவுவதாகவும் அவர் சொன்னார்.

நிகழ்ச்சி ஆதரவாளர்களுக்கும் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த 16 தலைவர்களுக்கும் அமைச்சர் சான் பதக்கவில்லைகளை வழங்கினார்.

அதற்குப் பிறகு நடைபெற்ற குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வில் அமைச்சர் சான், திருவாட்டி புவா, திரு டான், செல்வி காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், லிஷா பல்வேறு இன சமூகங்களுடன் சேர்ந்து சமூக உண்டியல் நிர்வாக இயக்குனர் ஜாக் லிம்மிடம் அறநெறி திரட்டு காசோலை ஒன்றையும் வழங்கியது.

அதைத் தொடர்ந்து, 13 இந்திய சமூகத்தினரைப் பிரதிநிதித்து நடன, பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழா சிங்கப்பூர் தெலுங்கு சமாஜத்தின் நடன நிகழ்ச்சியுடன் தொடங்கி, சிங்கப்பூர் குஜராத்தி சங்கம், ஹிந்தி சங்கம், சிங்கப்பூர் மலையாளி சங்கம், மால்வா கலாசார சங்கம், கன்னட சங்கம், சிங்கப்பூர் கல்சா சங்கம், மார்வாரி மித்ரா மண்டல், மகாராஷ்டிரா மண்டலும் நடன நிகழ்ச்சிகளைப் படைத்தன.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் பாடல் நிகழ்ச்சி ஒன்றைப் படைத்தது.

திருவிழாவில் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்து, தமிழர் பேரவை, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் இரண்டு நடன நிகழ்ச்சிகளைப் படைத்தன.

தமிழ் சமூகத்தினரின் அன்றாட வாழ்வில் தமிழ் பேசுவதை ஊக்குவிக்கவும், தமிழை வாழும் மொழியாக உருவாக்கவும் 1980ல் தொடங்கப்பட்ட தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் பாரம்பரிய தமிழ் நாட்டுப்புற நடனமான கோலாட்ட நடனத்தைப் படைத்தது.

இந்தியச் சமூகத் தலைவர் கோ.சாரங்கபாணியால் 1951ல் சிங்கப்பூர் தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் இணைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட தமிழர் பேரவை, ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற பல்வேறு கிராமிய நடனங்களைப் படைத்தது.

இந்திய சமூகத்தினர் ஒன்றாகச் சேர்ந்து படைத்த இறுதி நடன நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவுற்றது. இறுதி நடன படைப்பில் ஒடியா சங்கமும் கலந்துகொண்டது.

சமூக ஊடகம் மூலம் இந்நிகழ்ச்சியை பற்றி கண்டறிந்த பார்வையாளர்களில் ஒருவரான தௌஃபிகா ஜாஹிர் உசேன், 19, முதல்முறையாக இதுபோன்ற நிகழ்ச்சிக்கு வந்ததாகக் கூறினார்.

பல்வேறு இந்தியக் குழுக்களின் கலாசாரக் கலைகளைப் பார்த்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாக கூறிய தௌஃபிகா, “சிங்கப்பூரில் இந்தியச் சமூகம் எவ்வளவு பன்முகத்தன்மை வாய்ந்தது என்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகள் அருமையாக வெளிப்படுத்துகின்றன,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!